அந்த மூன்று பேருக்கும் - TopicsExpress



          

அந்த மூன்று பேருக்கும் உண்டாகியிருந்ததான பொறுப்பில், அரசியல் பிரமுகர்கள், அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளைப் பரிச்சயம் செய்து கொள்வது அவசியமாகியிருந்தது.. அதனால் சென்னையெனும் ராஜாதானிப் பட்டிணத்துக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் வந்து போவதும் அவசியமானது.. அப்படியாக ஒரு ஞாயிற்றுக் கிழமை.. ரொம்ப காலையிலேயே மதராஸ் பட்டிணத்துக்கு வந்து, ஜாகை எடுத்து, குளித்து முடித்து, ராயபுரம் கல்மண்டபம் சமீபத்தில் தங்கியிருந்த ஒரு பிரமுகரைப் பார்த்து விட்டு, திருவல்லிக்கேணிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். ஆட்டோவை கடற்கரை சாலை வழியே போகும்படி சொன்னார்கள்.. ஞாயிற்றுக் கிழமையில் மிக அதிகாலையில், ஜனக்கூட்டம் மொய்க்காத ஜார்ஜ் கோட்டை வாசலில் கொஞ்ச நேரம் ஆட்டோ தாமதித்தது. அந்த முரட்டு கதவில் முத்து வெள்ளை பெயிண்ட் அடித்திருந்ததன் அடையாளம் சொற்பமாக மிச்சமிருந்தது. வாசலில் பச்சைக் கலரில் போலிஸ் பூத்.. அதிலிருந்த போலிஸ்காரர்களிடம் சாவகாசம் தெரிந்தது. மதராஸ் யுனிவர்சிட்டிக்கு ஒட்டினதான பிரசித்தியான வாலாஜா சாலையில் ஆட்டோ வலப்புறமாகத் திரும்பியது. தமிழ் கிரிகெட் வர்ணனைகளில் சொல்லப்படும் வாலாஜா சாலை .. ஆட்டோ அந்த கிரிகெட் ஸ்டேடியம் தாண்டி, பெல்ஸ் ரோட் சந்திப்பில் கொஞ்சம் நிற்க வேண்டியதானது.. பெருநகரத்து பஸ் ஒன்று தனது நீளத்துக்கு அந்த இடத்தில் திரும்புவதற்கு அதிகம் சிரமம் எடுத்துக் கொண்டது. பஸ் ட்ரைவர் எதிர்புறம் வளைந்து ஸ்டியரிங்கை இழுத்து சமாளிப்பதில் லாவகம் தெரிகிறது.. இடது புறம் வரிசையாக ஸ்போர்ட்ஸ் கடைகள்.. எதிரே அரசாங்கா குடியிருப்புகள்.. திருவல்லிக்கேணி போலிஸ் ஸ்டேஷனுக்கு எதிரே குலாம் முர்துசா எனும் சின்ன சந்து வளைந்து போனால் முதலில் வருகிறதான் மேன்ஷனின் வாசலில் ஆட்டோ நின்றது.. சாயங்காலம் சந்திக்க வேண்டியதான அந்த அதிமுக்கிய ஆசாமியிடம் என்ன பேச வேண்டும் என முடிவு செய்து கொள்ளலாம் என பேசியபடி படியேறினார்கள் ரிசப்ஷனில் இருந்த பையன் , " சார் உங்க ஊர்லேர்ந்து போன் பண்ணினாங்க. உங்க வைஃபை ஆஸ்பத்திரில சேர்த்திருக்காங்களாம்.. உங்க்ளை உடனே புறப்பட்டு வரச் சொன்னார்கள்" எஸ் டி டி பூத் இத்தனை சின்னதாக கூண்டு போல இருப்பதில் அன்றைக்கு ஆத்திரம் மிகுதியாக வந்தது .. 04322.... ஹு ஹூம் ரிங் போய்க் கொண்டே இருக்கிற்து. யாரும் எடுக்கவில்லை "சந்துரு பதட்டப்படாதே.. ஒன்னும் ஆகாது.. ரூமுக்கு வா.. துணிமணியெல்லாம் பேக் பண்ணு.. நாங்களும் வரோம்.. கோயம்பேடு போனா.. எப்படியும் பஸ் கிடைக்கும்.. திருச்சிக்கு.. இல்லேன்னா விழுப்புரம் போய் அங்கேர்ந்து திருச்சி.. புதுக்கோட்டை மாறி மாறிப் போனாலும் .. போய்டலாம்.. இங்கேர்ந்தே சாப்பிட எதும் பார்சல் வாங்கிக்க்.." நர்சிங் ஹோம் படியேறும் எட்டு மணி நேர பஸ் பிரயாணக் களைப்பும் என்னிடம் இல்லை.. முன் ஹாலில்.. வரிசையான நாற்காலிகள்.. அந்தக் கடைசி நாற்காலியில் அப்பா.. "பதட்டப்படாதேப்பா.. ஒன்னும் ஆகாது.. மெதுவாக விஷயம் சொன்னார்" "அம்மா எங்கே.. " "இப்பதான் அவ போனா.. இதுவரைக்கும் இங்கெ தான் இருந்தா. நீ சாப்பிட்டியா.. முதல்ல சாப்பிடு.. ஒன்னும் ஆகாது.. டாக்டர்ஸ் இருக்காங்க.." என்ன சாப்பிட்டேன்.. எப்போது வீட்டுக்குப் போனேன்.. திரும்ப எப்போது வந்தேன்.. ஞாபகம் இல்லை.. அந்த ராத்திரி எப்படித் தூங்கினேன் என்பதும் நினைவில்லை ஆஸ்பத்திரிக்கு மொட்டை மாடி இருக்க வேணும்.. ஆனால் லிஃப்ட் மூன்றாவது மாடி வரைக்கும் தான் போகுமாம்.. மூன்றாவது மாடி ஆபரேஷன் தியேட்டர்.. அங்கே டாக்டர்கள், நர்சுகள் ஆஸ்பத்திரி சிப்பந்திகள் மட்டும் தான் அனுமதிப்பார்களாம்.. "வாட்ச்மேன் எனக்கு மூன்றாவது மாடியில் ஒரு ஜோலியுமில்லை.. எனக்கு ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும்.. மொட்டை மாடிக்குப் போகணும்.. மூனாவது மாடி வரைக்கும் லிஃப்டிலே போய் அங்கேர்ந்து மொட்டை மாடிக்கு படியேறிப் போகிறேன்" "பெரிய டாக்டரைக் கேட்கணும் சார்" "ஆனால் நான் படியேறி மொட்டை மாடிக்கு போனால் யாரையும் கேட்க வேண்டாமே" பதிலுக்கு காத்திராமல் ஏறி வந்திருந்தேன்.. சின்ன நகரத்தில் விசாலம் தெரிகிறது.. அந்த சினிமாத் தியேட்டருக்குப் பின்னாலே இப்படி வரிசையாக லைன் வீடுகள் இருப்பது இங்கிருந்து பார்த்தால் தான் தெரிகிறது.. டாக்டர் சொல்வது போல எப்படி திடீரென் காம்ப்ளிகேஷன் வந்தது கொடியிலே லுங்கி இரண்டு.. மூன்று உள்பாவாடை.. கொஞ்சம் தள்ளி ஒரு ப்ரா காயப் போட்டிருந்தார்கள் ஆரம்பத்திலே சாதாரணம் சாதாரணம் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.. இப்போது ஆபரேஷன் என்று சொல்கிறார்களே தூரத்திலே ஒரு மொட்டை மாடியில் துணி காயப் போட ஒரு பெண் .. என்ன வயதிருக்கும்... "இங்க நின்னுன்டு என்ன பண்றே.. அங்கே எல்லாரும் தியேட்டர்கிட்ட நிக்கிறா.. மொட்டை வெயில்ல என்ன பண்றே.. " அப்பாவும் படியேறி வந்திருக்க வேண்டும்,, மூச்சு வாங்குவதில் இரண்டு பக்க சட்டைப் பாக்கெட்டும் ஏறி இறங்கினது கைக்கடிகாரத்தில் மணி 1:03 என்றது.. இரண்டு நிமிஷத்தில் மூன்றாவது மாடி.. முன்னைக்கு இப்போது அந்த இடம் பிசியாக இருந்தது.. ஒன்னேகால் மணிக்கு இரண்டு டாக்டர்கள் வெளியே வந்தார்கள்.. என்னை அடையாளம் தெரிந்து வைத்திருந்தார்கள்.. என் பக்கம் வந்து என் கையைப் பிடித்துக் கொண்டார் .. அந்த டாக்டர்.. இப்படி சொல்லிக் கொண்டே வந்து இந்த இடத்தில் நிறுத்தினேன்.. என் மகள் என்னைக் கேட்டாள் "அப்பா ப்ளீஸ் சொல்லுப்பா டாக்டர் வந்து என்ன சொன்னார்" "கங்கிராஜுலேஷன்ஸ் சந்துரு.. உங்களுக்கு பெண் பிறந்திருக்கிறாள்.. சிசேரியன் தான்.. பட் நீட் நாட் வொரி.. ரெண்டு பேரும் நல்லாருக்காங்க.. பர்த் டைம் 1;08.... அப்படினு சொன்னார்.. அப்புறமா கொஞ்ச நாழி கழிச்சு ரோஸ் கலர்லே ஒரு டர்கி டவல்ல மெத் மெத்துனு உன்னை பொத்தி வச்சு.. திலகவதி டாக்டர் கொண்டு வந்து காண்பிச்சாங்க.. பொசு பொசுனு நிறைய பௌடர் போட்டிருந்தது உனக்கு... அன்னிக்கு ஆகஸ்ட் 31 " படீரென என் தொடையில் ஒரு சீப்பால் அடிக்கிறாள் என் மனைவி, " குழந்தைக்கு தலை வாரணும்.. ரொம்ப முரண்டு பிடிக்கிறாள்.. எதானும் கதை சொல்லுனு சொன்னா.. இப்படியா" Happy Birthday my dear Daughter
Posted on: Sat, 31 Aug 2013 01:51:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015