+++++++++++++++++++++++++++++ இந்தியாவைக் - TopicsExpress



          

+++++++++++++++++++++++++++++ இந்தியாவைக் கற்பனை செய்தல்... ++++++++++++++++++++++++++++++ “இந்தியா ஒரு ‘தேச அரசு” (Nation State) அல்ல. மாறாக இது ஒரு ‘பல் அரசு தேசம்’ (State Nation)” என்கிறார் அரசியல் சிந்தனையாளர் யோகேந்திர யாதவ். ‘தேச அரசு’ என்கிற அரசு வடிவத்தை 19ம் நூற்றாண்டு ஐரோப்பாதான் உலகிற்கு அறிமுகப்படுத்தியது. அதாவது ஒரே மொழி, இனம், பண்பாடு, மதம் என்பதாக அரசுகள் புதிய வடிவங் கண்டன. இத்தகைய பண்பாட்டு ஒரு சீர்த்தன்மை (Uniformity) இல்லாத போது அவை ஒரு சீர்த்தன்மையுடைய இரண்டு அல்லது மூன்று சிறு நாடுகளாகப் பிளவுண்டன. அல்லது ஒரு சீர்த்தன்மை உடைய அரசுகள் ஒன்றாக இணைந்தன. சில நேரங்களில் ஒரு சீர்த் தன்மைக்குப் புறம்பாக உள்ள மற்ற இனங்கள் வன்முறையாக அழித்தொழிக்கப்பட்டன (ethnic cleansing). பல்வேறு மொழிகள், பல்வேறு இனங்கள், பல்வேறு மதங்கள், பல்வேறு சாதிகள் அடங்கிய இந்தியாவை ஒரு அரசின் கீழ் கொண்டுவருவது, அவர்களது ‘தேச அரசு’ மாடலுக்கு ஒரு சவாலாகவே இருந்தது. இங்கே, விடுதலைப் போராட்டத்தின் ஊடாக ஒரு இந்திய தேசியத்தை, ஐரோப்பிய பாணியில் கட்டமைக்க முனைந்தவர்களுக்கு இந்த சீரற்ற தன்மை தேசிய வரையறையைக் கட்டமைப்பதில் சிக்கலைத் தந்து கொண்டே இருந்தது, இந்துத்துவவாதிகளைப் பொருத்த மட்டில் “இந்து, இந்தி, இந்தியா” என்கிற ரீதியில் ஒரு சீரமைப்பைக் கொண்டு வர முயற்சித்தனர். (பார்க்க: எஸ்.வி.ஆரின் இந்தத் தலைப்பிலான நூல்) மாறாக காந்தி, தாகூர், நேரு ஆகியோர் ஐரோப்பிய பாணியைத் தவிர்த்து ஒரு தேசியத்தைக் கட்டமைத்தனர். ஒரு சீர்த் தன்மை அற்ற, பன்மைத்தன்மையான அரசாக நவீன இந்தியாவை அவர்கள் கற்பனை செய்ததோடு வெற்றிகரமாகக் கட்டமைக்கவும் செய்தனர் என்கிறார் யோகேந்திர யாதவ். ஆக, ஐரோப்பிய பாணியிலான ஒரு ‘தேசிய அரசாக’ இல்லாமல் இந்தியா ஒரு ‘பல் அரசுத் தேசியமாக’ அமைந்தது. “வேற்றுமையில் ஒற்றுமை” என்கிற முழக்கமும் உருவானது. அரசுகள் இந்தப் பன்மைத்தன்மையை ஏற்று அனைத்து இனங்கள், மொழிகள், மதங்கள் எல்லாவற்றிற்கும் சம நிலை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மொழி, இனம், மதம், ஏன் ஒடுக்கப்பட்ட சாதிகள் ஆகியனவும் தத்தம் அடையளங்களுடன் கோரிக்கைகளை வலியுறுத்தி இயங்க சட்டபூர்வமான அரசியல் வெளியும் உருவானது. அப்படியும் இன்று வட கிழக்கிலும், காஷ்மீர் முதலான பகுதிகளிலும் இன்று பிரச்சினைகள் உள்ளதென்றால், அது இந்த அணுகல்முறையின் தோல்வி அல்ல. மாறாக இந்த அணுகல்முறையை அடுத்தடுத்து வந்த அரசுகள் முறையாகக் கடைபிடிக்காமையே அதற்குக் காரணம். முன்னாளைய சோவியத் யூனியன், யுகோஸ்லாவியா ஆகியவற்றின் சிதைவை அரசுகள் ஒரு எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டும்.. இலங்கையில் நடை பெற்ற தமிழ் ஈழத்திற்கான உள்நாட்டுப் போரும், பாகிஸ்தானின் தோல்வியும், இந்தியா போன்ற பல்மத, பல் இன, பல் மொழி பேசும் நாடுகளில் ஐரோப்பிய மாதிரியிலான ஒரே மாதிரியான பண்பாட்டுடன் கூடிய ‘தேச அரசு’ மாதிரியைக் கட்டமைக்க முனைவோருக்கு ஒரு பாடமாக அமையட்டும் என்கிறார் யோகேந்திர யாதவ். Yogendra Yadav: India is a State-Nation, Not a Nation-State Read more at: ibnlive.in/news/india-is-a-statenation-not-a-nationstate-yogendra-yadav/417588-55.html?utm_source=ref_article
Posted on: Sat, 02 Nov 2013 11:03:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015