கிறுக்குமண்டை - TopicsExpress



          

கிறுக்குமண்டை எலுமிச்சைகள் ______________________________ “நல்லா இருக்கு!” என்பது ஒரு மதிப்பீடு. ஆனால் இதற்கான அளவுகோள் என்ன? சிந்திக்க வேண்டா, அன்பர்களே! எது நம்மைச் சிந்திக்க விடாமல் அமுக்குகிறதோ அதுதான் அது. தற்கொலைச் சிந்தனையில் இருந்து தப்பித்து, ஐந்து மணி நேர ஏற்ற இறக்கத்து நடையால் என் உடம்பு களைப்புக் கண்ட வேளை, அந்த மலை உச்சியை எட்டியிருந்தேன். அப்பால், தாழே மிகமிகத் தாழே, வானையும் வளைத்து ஒளிமினுக்கி, மடிவிரித்துக் கிடந்தது நீல மணிக் கடல்! “நல்லா இருக்கு, இல்லே?” இம்மட்டுத்தான், மற்று என் உடல் மனம் எதுவும் அங்கில்லை அக்கணம்! ஒரு மழலைப் பாடலில்; ஒரு பொரிக்கான் சட்டியின் உயிர்ப்பில்; ஒரு கசப்பின் மதுச்சும்பனம் பூமியை உதிர்க்கையில்; ஆண் அடிநாள நுனிப்பொருத்தோ பெண் வடதுருவப் பரல்முடிச்சோ, நாவு தீண்டக் காது மடல் போதும்: “நல்லா இருக்கு!” ||எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே|| என்பதால், எழுத்துவினையால் சிந்தனை அறுக்க ஏலாது. மூளைக்குப் போகிற எதுவும் “நல்லா இருக்கு!” என மொழியாது. காண்பவரின் கட்டுப்பாட்டுக்கு அப்பால், இருட்டு அரங்கின் முன்மண்டைப் படுதாவில் நகர்ந்தியங்கும் கனா, நாம் வெளியேறிப் போகும் அளவும், நம்மைச் சித்திக்கவிடாமற் செய்யுமேல் அந்தத் திரைப்படம், “நல்லா இருக்கு!” எனப் பேர் எடுக்கும். சிந்திக்க இடம் தந்தால்? 1. காவலர்கள் இருவரில் ஒருவன் திரைநடுவுக்கு வருகிறான்; 2. நாயகனின் துமுக்கி வாய்முனை (barrel of the gun) திரைநடுவில் காட்டப்படுகிறது; 3. காவலன் இடப்பக்கமாகச் சரிகிறான், ஆனால் அவன் திரைநடுவிலேயே இருக்குமாறு கேமரா இடம் நகர்கிறது. 4. நாயகன் ஒரு வெட்ட நில வெளியில் ஓடிக்கொண்டு இருக்கிறான். இது கோதார் (Godard) இயக்கிய “Breathless” படத்தில் ஒரு காட்சி. காவலன் சுடப்பட்டுத்தான் விழுந்தானா? நாயகன்தான் சுட்டானா? இதற்கெல்லாம் விடை என்ன தெரியுமா? காவலனும் நாயகனின் துமுக்கி வாய்முனையும் ஒரே இலக்கில் (அதாவது திரைநடுவில்) பொருத்திக் காட்டப் பட்டதால், காவலன் நாயகனால் சுடப்பட்டான் என்றே அர்த்தமாம். இப்படி சிந்திக்க இடம் தந்துதான், இங்கே, இயக்குநர் மிஷ்கின் ஏச்சு வாங்கிக் கட்டுகிறார். ஆனால் இப்போது அரங்கு நிறைந்து ஓடிக்கொண்டு இருக்கிற “ஆரம்பம்” படத்தில், ‘ஒரு கணிப்பொறியாளர் (ஆர்யா) துப்பாக்கி எடுத்துச் சுட்டுத் தள்ளுகிறாரே எப்படி?’ என்று நாம் சிந்திப்பதில்லை. என்றால், படம் “நல்லா இருக்கு!” என்றாகிறது. (மிஷ்கினின் “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” படத்தில், துமுக்கியாற் சுட மருத்துவ மாணவன் பயிற்றப் படுவான். ஆர்யா என்றால் தேவை இருக்காது போலும் :) ) அந்தக் காலத்து வணிகப் படங்களில், உச்சகட்டச் சிக்கலுக்கு முந்தி ஒரு சோகப் பாடல் இடம்பெறும். (எ.டு. எங்க வீட்டுப் பிள்ளை: “மலருக்குத் தென்றல் பகையானால்...”). நம்மில், ‘அடடா, படம் முடியப் போகிறதே’ என்று ஒரு சோகம் வந்து கப்பும். இந்தக் காலத்தில், அதே கட்டத்தில், சோகப்பாட்டு வைத்தால் வேகம் குறைந்துவிடும் (அல்லது மூத்திரம்/புகை விடப் போய்விடுவார்கள்) என்று குத்துப்பாட்டு வைக்கிறார்கள். அது சரி, அந்தக் கட்டத்தில் பாட்டுக்கு என்ன தேவை? ஓடுகிற வண்டியின் சன்னல் ஓரம் இருந்து வீசுகிற பார்வையில், தொடர்ந்து மரக்கூட்டங்களே படுமானால் அலுத்துவிடக் கூடும். வயல் வரப்பு என, ஆற்று அறுப்பு என, மலைமுடி ஏற்றம் என, தாழ்வரை இறக்கம் என, இடையிடையே, ஒரு வெளிவாங்கல் தோன்றுமேல் ஆன்ற அழகுணர்வும் தோன்றும். கேரள நில வெளியில் ஊர்ந்தலைந்த காலங்களில் நான் கண்டு தெளிந்த கலைக்கொள்கை இது. (“நாடோடித் தடம்” பக். 225) ஸ்பீல்பெர்க்கின் “JAWS” படத்தில், நாயகர் மூவரில் துணிச்சல்கார மீனவனைச் சுறா விழுங்கும் அந்தப் பரபரப்புக் காட்சிக்கு முன், நாம் அலுத்து ஓய்கிற அளவுக்கு ஒரு monologue வரும். அதே தேவைதான் திரைப்படத்தில் ஒரு பாட்டுக்கும். “ஆரம்பம்” படத்திலாவது பரவாயில்லை, அதற்கான ஒரு சூழ்நிலை (பிறந்தநாள்) உருவாக்கப் படுகிறது. “பாண்டிய நாடு” படத்தில் அதுவும் இல்லை. சினைக்கு அலைகிற பசு காளைமேல் தவ்விக்காட்டும் பார்த்தீர்களா, அது போலத் தவ்வுகிறாள் நாயகி. குத்துப்பாட்டு செருகப் படுகிறது. சேலை கட்டுவதே கொப்பூழ்க் காட்டத்தான் என்பது நம் நாகரிக மரபு அல்லவா? ஆனால் “பாண்டிய நாடு” நாயகி கொப்பூழுக்கும் கச்சைகட்டி ஆடுகிறாள். ‘அது ஏன்?’ என நாம் சிந்திக்க நேர்ந்தால், “நல்லா இல்லை” என்னும் நினைப்பு நமக்கு வருமா இல்லையா? “ஆரம்பம்” படத்திலும் இப்படி மூளையை உசுப்புகிற காட்சிகள் உண்டுதாம், ஆனால் நாயகன் அஜித் தன் அதிரடிகளால் அடித்துக் கிடத்திவிடுகிறார். “பாண்டிய நாடு” படத்தில், வீம்புக்கு வாயடிக்காத - நிகழ்த்திக் காட்டப்படும் - நகைச்சுவைக் காட்சிகள், ‘அமுதாவின் காதலர்கள்’ துணைக்கதை, பாத்திரப் படைப்பு, பாரதிராஜாவின் நடிப்பு இன்ன பல சிறப்புகள் உண்டு. இன்றைய எழுத்தாளர்களில் திரை-எழுத்துத் தெரிந்தவராக வெற்றிபெற்று நிற்கிற பாஸ்கர்சக்தியின் பங்களிப்பு ஆகலாம் இவை. பார்க்கப்படத் தக்க ஒரு நல்ல படம் “பாண்டிய நாடு”. நம்மைச் சிந்திக்க விடாமல் அமுக்கி இருத்துகிற ஒரு படம் “ஆரம்பம்”. நானும், ஒரு காலத்தில், சிந்திப்பவனாகவே இருந்தேன். அதற்குப் பொருத்தமாகத் தாடி வைத்திருந்தேன். கலைப்படங்கள் பார்த்தேன். இப்போது “நல்லா இருக்கு / இல்லை” கட்சிக்கு மாறிவிட்டேன். வணிகத் திரைப்படங்கள், என் கிறுக்குத் மண்டைக்கு எலுமிச்சை போல. :) :)
Posted on: Wed, 06 Nov 2013 07:03:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015