தொழாதவர்களுக்கு ஜனாஸா - TopicsExpress



          

தொழாதவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா என்ற கேள்வியை எழுப்புகிறது உணர்வு வார இதழ். ---------------------------------------------------------------------- 45 ஆண்டுகாலம் நாத்திகப் பிரச்சாரம் செய்து,இறுதியில் இஸ்லாத்தை தழுவி தனது வாழ்நாளின் கடைசி சில ஆண்டுகள் இஸ்லாமிய அழைப்புப் பணியில் தன்னை முழுமையாக உட்படுத்திக் கொண்டவர் டாக்டர்.அப்துல்லாஹ். டாக்டர்.அப்துல்லாஹ்வின் இறப்பு செய்தி முஸ்லிம்கள் மட்டுமலாமல் முஸ்லிம் அல்லாத பலருக்கும் ஒரு கவலையான செய்தியாகவே இருந்தது.அவரது இறுதி தொழுகையின் போது கலந்து கொண்டவர்களே இதற்கு சாட்சி. எல்லோரும் அப்துல்லாஹ்வின் தொழுகையில் எல்லா அமைப்புகளும் கலந்து கொண்டன ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் கலந்து கொள்ளவில்லை என்று சொல்லப்படுவது உண்மையா?-இது டி.என்.டி.ஜே நடத்தும் உணர்வு இதழில் வாசகர் ஒருவர் கேட்ட கேள்வி. இதற்கு பதிலளித்த அந்த இதழின் ஆசிரியர் பீ.ஜே,டாக்டர்.அப்துல்லாஹ் இணைவைப்பாளர் என்றும்,நரகவாசி என்றும் கூறி முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.அவரது பதில்கள் வழ வழா கொழ கொழா என்ற ரீதியில் இருந்தாலும் அதன் விமர்சனங்கள் பாரதூரமானவை.வரிக்கு வரி விமர்சனம் பண்ணினால் நம் பதிவு விரிவாகப் போய்விடும் என்பதால் குறிப்பிட்ட சாரத்தை மட்டும் எதுத்துக்கொண்டு இங்கே மறுவிமர்சனத்தை மட்டும் முன் வைப்போம். 'இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது. அல்குர் ஆன் 9 : 113' இந்த வசனத்தின் மூலம் டாக்டர்.அப்துல்லாஹ் நரகவாசி,இணைவைப்பாளர் என்றும் கூறி,இணைவைப்பாளர்களுக்கு பாவ மன்னிப்பு கேட்க கூடாது என்பதால் அப்துல்லாவின் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளவில்லை என்று நியாயப்படுத்துகிறார். டாக்டர்.அப்துல்லாஹ் எப்படி இணைவைப்பாளர் ஆனார்? அதையும் கண்டு பிடித்து சொல்கிறார் சகோ.பீ.ஜே. 'பெரியார் தாசன் அப்துல்லாஹ் அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் பெரியார் கொள்கையைப் பெருமையுடன் பிரச்சாரம் செய்ததாலும், பெரியார் சிலைக்கு மாலை போட்டதாலும் இதைக் கடவுள் மறுப்புக் கொள்கையாகவே நாம் கருதுகிறோம். கடவுளை வணங்குபவன் முட்டாள் என்று சொன்னதுதான் பெரியாரின் பிரதானமான கொள்கை என்பது தமிழ் உலகமே அறிந்த உண்மையாகும்.' இது தவிர,டாக்டர்.அப்துல்லாஹ் பெரியார்தாசன் என்று அழைக்கப்பட்டாராம்.இனி யாரும் தன்னை பெரியார் தாசன் என்று அழைக்கக் கூடாது என்று அவர் பகிரங்கமாக அறிவிக்கவில்லையாம்.பெரியாரின் அடிமை என்று அழைக்கப்பட்டதால் இதுவும் இணைவைப்பு தானாம் இது தவிர, தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த மரணித்த ஒருவரின் கடந்த காலத்தை உள்நோக்கத்தோடு ஆராய்ந்து இந்த பதில் எழுதப்பட்டுள்ளது.. மேலே கண்ட திருமறை வசனம் மக்கத்து காபிர்களுக்கு,அதாவது இறை நிராகரிப்பாளர்களுக்கு சொல்லப்பட்டது.அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள்...அல்லாஹ்வை மறுத்தவர்கள். இந்த வசனத்தை,அல்லாஹ்வை ஏற்று ஓரிறைக் கொள்கைப் பிரச்சாரம் செய்த டாக்டர்.அப்துல்லாஹ்வுடன் ஒப்பிட்டுக் கூறுவது எப்படி பொருத்தமாகும்? ஏற்கெனவே இதே இதழில்,த.மு.மு.க. ஐ.என்.டி.ஜே,எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட அமைப்பினருடன் தொடர்பு வைத்துக்கொள்ளலாமா என்று ஒரு வாசகர் எழுப்பிய கேள்விக்கு, 'மார்கத்தை எதிர்த்து உங்களோடு போருக்கு வருவோரை உற்ற நண்பர்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள்' என்கிற 60:1,2 திருமறை வசனங்களை மேற்கோள் காட்டி இந்த அமைப்பினர்களுடன் நட்பு பாராட்டக் கூடாது என்று பதிலளித்திருந்தார் பீ.ஜே. இதுவும் மக்கத்து காபிர்களுக்காக இறக்கப்பட்ட வசனங்கள் தான்.இதை வைத்து,டி.என்.டி.ஜே வை எதிர்ப்பவர்களெல்லாம் மார்க்கத்தை எதிர்ப்பவர்களாக சித்தரித்தார் பி.ஜே.என்பது இங்கே கவனத்திற்குரியது. டாக்டர்.அப்துல்லாஹ் இஸ்லாத்தை ஏற்ற போது 'அவரை நாங்கள்(இஸ்லாத்தில் சரியாக இருக்கிறாரா என்று ) கண்காணிக்கிறோம்' என்று சொன்ன பீ.ஜே,பிறகு டாக்டர்.அப்துல்லாஹ் வீட்டிற்கு பூங்கொத்துடன் போய் சந்தித்து தான் மொழி பெயர்த்த திருமறை கொடுத்தார்.வெளியே வந்து,'எல்லா மொழியாக்கங்களை விடவும் எனது மொழியாக்கம் தான் சிறப்பாக இருக்கிறது என அப்துல்லாஹ் சொன்னார்'என்றெலாம் பெருமை பேசினார். இப்போது அவரை நரகவாசி என்கிறார்! டாக்டர் அப்துல்லாஹ் இறுதிவரை இஸ்லாமிய அழைப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார்.திருச்சி புலிவலம் என்ற பகுதியில் ஒரு இஸ்லாமிய சொற்பொழிவுக்காக சுன்னத் ஜமாத்தை சேந்தவர்கள் அப்துல்லாஹ்வை அழைத்திருந்தனர்.அங்கே போன பிறகு தான் தெரிந்தது அது மீலாது விழா என்று.ஒரு நண்பர் மீலாது விழா இஸ்லாத்திற்கு எதிரானது என்று சுட்டிக்காட்டிய பின் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டு,இனி இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்ததாக அப்துல்லாஹ் தெரிவித்திருந்தது பலரும் அறிந்த உண்மை. அப்போதே இந்த மீலாது விஷயத்தை வைத்து டாக்டர் அப்துல்லாஹ்வை (அந்த நிகழ்ச்சியை அவர் புறக்கணித்தது கூட தெரியாமல்)பி.ஜே விமர்சித்திருந்தார்.அப்போது நாகரீகமாக,இப்படி அவதூறு சொல்பவர்கள் -இது போன்ற நிகழ்ச்சிகள் மார்கத்திற்கு புறம்பானது என்று எனக்கு சுட்டிக்காட்டி இருக்கலாமே என்று கேட்டிருந்தார் அப்துல்லாஹ். பெரியார் சிலைக்கு அப்துல்லாஹ் மாலை போட்டார் என்ற தகவல் நமக்கு இதுவரை தெரியாது.தெரிந்திருந்தால் நாம் சுட்டிக்காட்டி இருப்போம் இது தவிர்க்கப் படவேண்டிய விஷயமென்று!.அப்படி அவர் மலை போட்டது உண்மை என்றாலும்,அதை சுட்டிக்காட்டி இருக்கலாம்,அல்லது இதே உணர்வு இதழில் கூட கேள்வியும் நானே பதிலும் நானே என்ற பாணியில் எழுதி இருக்கலாம்.அதன் மூலம் அப்துல்லாஹ் திருத்திக்கொள்ளும் வாய்ப்பு இருந்திருக்கும்.அதை இவர்கள் செய்யவில்லையே ! அதே சமயம்,மீலாது குறித்து சுட்டிக்காட்டிய நண்பர்களை போல்,பெரியார் சிலைக்கு மாலை போட்ட செய்தியும் கேள்விப்பட்டு நண்பர்கள் யாராவது அப்துல்லாஹ்விடம் சுட்டிக்காட்டி இருக்கலாம்,அதை உணர்ந்து அப்துல்லாஹ் இறைவனிடம் மன்னிப்பு கோரியிருக்கலாம் இதற்கு முகாந்திரம் இருக்கிறது.இது அல்லாஹ்வும் அப்துல்லாவுமே அறிந்த உண்மையாகும்.இதை எல்லாம் தெரியாமல்,அல்லது இப்படி வாய்ப்பிருக்கிறதே என்கிற அறிவு கூட இல்லாமல்,அப்துல்லாஹ் ஏதோ தொடர்ந்து பெரியார் சிலைகளுக்கு மலை போட்டுக்கொண்டு திரிந்துகொண்டிருதார் என்கிற ரீதியில் எழுதுவது என்ன அறிவுடைமை? அடுத்து, 'பெரியார் தாசன் அப்துல்லாஹ் அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் பெரியார் கொள்கையைப் பெருமையுடன் பிரச்சாரம் செய்ததாலும், பெரியார் சிலைக்கு மாலை போட்டதாலும் இதைக் கடவுள் மறுப்புக் கொள்கையாகவே நாம் கருதுகிறோம். கடவுளை வணங்குபவன் முட்டாள் என்று சொன்னதுதான் பெரியாரின் பிரதானமான கொள்கை என்பது தமிழ் உலகமே அறிந்த உண்மையாகும்' எகிறார் பி.ஜே 'பெரியார் தாசன் அப்துல்லாஹ் அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் பெரியார் கொள்கையைப் பெருமையுடன் பிரச்சாரம் செய்ததாலும்' இப்படி சொல்வதன் மூலம் ஒரு அபத்தத்தையும் அவதூறையும் சொல்லியுள்ளார் பி.ஜே.பெரியாரின் கொள்கை என்றாலே அது கடவுள் மறுப்பு கொள்கை என்று தான் பொதுவாக பொருள் கொள்ளப்படும்.இந்த கடவுள் மறுப்பு கொள்கையையா அப்துல்லாஹ் பிரச்சாரம் செய்தார்.? பெரியாரின் கொள்கையை முஸ்லிம்களோ,இஸ்லாத்தை ஏற்ற பின் டாக்டர் அப்துல்லாவோ பிரச்சாரம் பண்ணவில்லை.ஆனால் பெரியாரின் நல்ல கருத்துக்களை பி.ஜே உட்பட எல்லோரும் இன்றுவரை அவ்வப்போது மேற்கோள் காட்டி பிரச்சாரம் செய்தே வருகிறோம்.ஆனால் யாரும் பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை பிரச்சாரம் செய்வதில்லை.அப்துல்லாவும் இதை பிரச்சாரமாக செய்ததில்லை..ஆனால் ஏன் அப்துல்லாஹ் மீது இந்த அவதூறு? டாக்டர். அப்துல்லாஹ் பெரியார் தாசன் என்று அழைக்கப்பட்டதும் அவர் இணைவைப்பாளர் ஆகிவிட்டதற்கு சான்றாக சொல்கிறார் பி.ஜே. பெரியார்தசனாக இருந்து,இஸ்லாத்தை ஏற்று டாக்டர்.அப்துல்லாஹ் என்று மாறிய பின்னர் அப்துல்லாஹ் என்று அவரை அழைப்பது தான் நாகரிகமான செயல்.இதை அவர் பகிரங்கமாக அறிவிக்கவில்லையாம்.இப்படி சொல்லும் பி.ஜே வும் அவரை பெரியார் தாசன் என்றே உணர்வில் எழுதிய பதிலில் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். என்ன அவசியம் வந்தது இதை எல்லாம் எழுதுவதற்கு?டாக்டர்.அப்துல்லாஹ் விஷயத்தில் அவர்களுக்கு மாற்று நிலைப்பாடு இருக்குமேயானால் அமைதியாக இருந்து விட்டு போகலாமே....அப்துல்லாஹ்வின் ஜனாஸா தொழுகையில் இவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பதால் சமுதாயம் கவலை அடைந்ததா? பி.ஜே சொல்வது போல் டாக்டர் .அப்துல்லாஹ் பெரியார் சிலைக்கு மாலை போட்டதும் ,அவரது கொள்கைகளை பிரச்சாரம் செய்ததும் தான் அவரது ஜனாஸா தொழுகையில் பி.ஜே &கோ கலந்து கொள்ளாததற்கு காரணம் என்றால் முஸ்லிமுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் வித்தியாசம் தொழுகை தான் என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.இதன் படி ,தொழாதவர் முஸ்லிம் இல்லை என்றாகிறது.அப்படியானால் தொழாதவருக்கு ஜனாஸா தொழுகை தொழலாமா ?இந்த கேள்விக்கும் உணர்வு பதிலெழுதட்டும்!இந்த கேள்வியைத்தான் எழுப்பியுள்ளது உணர்வின் பதில்!
Posted on: Fri, 30 Aug 2013 11:18:19 +0000

Trending Topics



>

Recently Viewed Topics




© 2015