பொறியியல் கல்லூரியில் - TopicsExpress



          

பொறியியல் கல்லூரியில் ஒரு இடம் கூட நிரம்பாத துறைகள் By Vanisri Sivakumar, சென்னை தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பாத பல துறைகள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி முடித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை பெறாமல் போன காலி இடம் 89 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது வெறும் எண்ணிக்கையாக எடுத்துக் கொண்டால், ஆண்டு தோறும் அதிகரித்து வரும் எண்ணிக்கையாகவே கூற வேண்டும். ஆனால், பல கல்லூரிகளில் ஒரு துறையில் ஒரு மாணவர் கூட சேராமல் இருப்பதுதான் மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது. அந்த துறை ஏதோ வெளியில் தெரியாத, அதிகம் பிரபலமில்லாத துறையாகக் கூட இல்லை. எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், ஐடி போன்ற மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் துறைகளாகும். அந்த வகையில், தமிழகத்தில் உள்ள சுமார் 37 கல்லூரிகளில் எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறையில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. அதேப்போல 30 கல்லூரிகளில் தகவல் தொழில்நுட்பம் எனப்படும் ஐடி துறையில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. அதேப்போல ஏராளமான கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் ஒரு மாணவர் கூட சேர்க்கை பெறாமல் உள்ள நிலையும் இருக்கிறது. கல்லூரியைத் துவக்கி பல ஆண்டுகளாகி, புகழ்பெற்ற நிறுவனங்கள் பெரும்பாலானவை மாணவ சேர்க்கையை சரியான முறையில் நடத்திவிட்டன. ஆனால், சமீபத்தில் துவக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளும், அதிகம் அறியப்படாமல் உள்ள கல்லூரிகளும் தான் காலியிடங்களை அதிகம் கொண்டிருக்கின்றன. இதில் பல துறைகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்றாலோ அல்லது ஒன்று அல்லது இரண்டு மாணவர் மட்டுமே சேர்ந்திருந்தாலோ அந்த துறையின் நிலை என்னவாகும். இது மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரில் ஒரு சிலரே கலந்தாய்வுக்கு வராமல் இருப்பார்கள். இது முதலில் ஒன்று இரண்டு என துவங்கி இறுதியில் 500 வரை கூட ஆகும். ஆனால், இந்த ஆண்டு, அழைக்கப்பட்டோரில் வராதவர்களின் எண்ணிக்கை முதல் நாளில் இருந்தே நூற்றுக்கும் அதிகமாக இருந்தது. இறுதி நாட்களில் இது 3 ஆயிரத்தை எட்டியது மிகப்பெரிய விஷயமாகக் கருதப்பட்டது. முன்பெல்லாம் பிளஸ் 2 முடித்தவர்கள் நேராக பொறியியல் சேர்ந்துவிடுவார்கள். ஆனால், தற்போது மாணவர்கள் சிந்தித்து, உரிய துறையை தேர்வு செய்கிறார்கள். ஊடகங்களின் வாயிலாக கல்வித் துறையில் விரிந்து பரந்து இருக்கும் படிப்புகளை பற்றி அறிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது. பொறியியல் படித்து விட்டு வேலையில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், இவர்களது கவனம் தற்போது வேறு நல்ல துறைகளை நாடிச் செல்கிறது. பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் பல ஆண்டுகளாக இருக்கும் நிலையில், ஆண்டு தோறும் பொறியியல் கல்லூரிகளைத் துவக்க ஏஐசிடிஇ அனுமதி வழங்குவதும், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி வழங்குவதும், காலியிடங்கள் அதிகரிக்க மேலும் சில காரணங்களாகும். இந்த நிலையில், அதிகம் பிரபலமாகாத கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. வளாகத் தேர்வு இருக்கும் கல்லூரிகளாகப் பார்த்து சேரும் மாணவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அவ்வாறு இல்லாத கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் வெளியே வந்து வேலை தேடும் போது எதிர்கொள்ளும் சிக்கல்கள் பல. இந்த நிலையில், மேலும் புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பதை ஏஐடிசிஇ தான் நிறுத்தி வைக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கருத்தாகும்.
Posted on: Sun, 04 Aug 2013 11:06:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015