சுபாஷ் சந்திர போஸ் - TopicsExpress



          

சுபாஷ் சந்திர போஸ் மர்மங்களின் மன்னன்….. தாயக மைந்தன் August 19, 2013 Comments Off இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிகப் பெரும் பங்காற்றிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இறந்ததாகக் கருதப்படும் தினம் (ஆகஸ்ட் 18, 1945) நேற்றாகும். இருந்தாலும் மறைந்த இந்த மாபெரும் வீரரின் மரணம் தொடர்பாக இன்றுவரை பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன. இவர் எங்கு, எப்போது இறந்தார் என்பது தொடர்பாக மூன்று பிரதான ஐதீகங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் முதலாவது ஐதீகம் ஆனது ஜப்பானிய வானொலி ஒன்று அறிவித்தது போல பர்மோசா தீவுக்கு அருகே தாய்பேயில் வானூர்தித் தளத்தில் நடந்த விபத்தொன்றில் ஆகஸ்ட் 18, 1945 ஆம் ஆண்டு நேதாஜி இறந்துவிட்டார் என்பதாகும். இரண்டாவது ஐதீகத்தின் படி நேதாஜி ரஷ்யாவிற்கு தப்பிச் சென்று அங்கேயே வாழ்ந்து இறந்திருக்கலாம். இறுதியானதும் அதிக சர்ச்சைக்குள்ளனதுமான ஐதீகத்தின் படி 1985 வரை உத்தரப்பிரதேசத்தில் வாழ்ந்து இறந்த பகவான்ஜி அல்லது கும்நமி பாபாவே சுபாஷ் சந்திர போஸ் ஆவார். இவற்றுள் எந்த ஐதீகம் சரியானது என்று இதுவரை நிரூபிக்கப் படாத போதும் அவை ஒவ்வொன்றும் தமக்கான வாதப் பிரதிவாதங்களைக் கொண்டுள்ளன. இவற்றை ஆழ்ந்து ஆராய்ந்தால் சிலவேளை போஸின் மரணம் குறித்த மர்மம் வெளிவரலாம். மேற்குறிப்பிட்ட மூன்று ஐதீகங்களுக்கான ஆதாரங்கள் தொடர்பில் இனி ஆராயலாம். முதலாவதாக போஸ் தனது பயணத் திட்டத்தின்படி ரஷ்யாவிற்கு செல்வதற்காகப் பயணித்துக் கொண்டிருந்தபோது தாய்பேய் வானூர்தித் தளத்தில் இறந்திருக்கலாம் என்ற ஐதீகம். இரண்டாம் உலக போரின் பின்னணியில் புனையப்பட்டுள்ள இந்த ஐதீகமே முதன் முதலில் இந்திய மக்களுக்கு சுபாஸ் சந்திர போஸின் முடிவு குறித்து வழங்கப்பட்ட தகவலாகும். இதற்கு ஆதாரமாக நேதாஜியின் இறுதியாக எடுக்கப்பட்ட புகைப்படமான கோ சு மிங் நகரில் ஆகஸ்ட் 17, 1945 இல் எடுக்கப்பட்ட புகைப்படமானது குறிப்பிடப்பட்டபோதும், பின்னர் குறித்த ஆண்டு குறிப்பிட்ட (ஆகஸ்ட் 15-20) காலப் பகுதியில் தனது நாட்டில் எந்த விமான/ வானூர்தி விபத்தும் நடைபெறவில்லை என்று தைவான் நாடு உறுதிப்படுத்தியதானது இந்த ஐதீகத்தை வலுவிழக்கச்செய்துள்ளது. மேலும் சுபாஸ் சந்திர போஸின் மரணம் குறித்து விசாரணை செய்ய இந்திய அரசினால் நியமிக்கப்பட்ட மூன்று கமிஷன்களில் 2 இதனை உறுதிப்படுத்தியபோதும், மூன்றாவதான முகர்ஜி கமிஷன் இந்த ஐதீகத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வாதிட்டது. அது தவிர உண்மையிலேயே அவர் அவ்வாறு இறந்திருந்தால் அவருடைய உடலை ஏன் இந்தியாவிற்கு வழங்கவில்லை என்றும் நேதாஜியின் உடல் ஜப்பானில் எரிக்கப்பட்டு அங்குள்ள கோயில் ஒன்றில் அவரது சாம்பல் அங்குள்ள கோயில் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது என்ற புனையப்பட்டுள்ள கதைக்கு அந்த சாம்பல் மற்றும் எலும்புகளை DNA பரிசோதனைக்குட்படுத்த இந்திய அரசு ஏன் அனுமதிக்கவில்லை என்பது குறித்தும் இந்திய மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். நேதாஜியை ரஷ்யாவிற்கு தப்பிச் செல்ல வைத்து அவரை அங்கு வெளியுலகிற்கு தெரியாமல் வாழ வைக்கவே அவர் இறந்துவிட்டதாக போலிச் செய்தி பரப்பட்டதாக இரண்டாவது ஐதீகத்துக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் ரஷ்யாவில் அவர் வாழ்ந்ததாகவோ அல்லது இறந்ததாகவோ காட்டிக் கொள்ளும்படி அங்கு எந்த ஆதாரங்களும் இல்லை. ஆனாலும் அந்தக் காலப்பகுதியில் விஜட்நாம் அதிபர் ஹோசிமின்னுக்கும் நேதாஜியிற்கும் இடையில் இருந்த நெருங்கிய நட்புக் காரணாமாக அவரே நேதாஜியைப் பாதுகாத்திருக்க வேண்டும் என்கிறார் நேதாஜி பற்றி பல உண்மைகளை அறிந்த தேவபிரதா விஸ்வாஸ். முதல் இரண்டு ஐதீகங்களிலும் பார்க்க சற்று உறுதியானதும் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானதுமாக மூன்றாவது ஐதீகத்தைக் குறிப்பிடலாம். இதன்படி பைசியாத் நகரில் பகவான்ஜி அல்லது கும் நமி பாபா (பெயர் அற்ற துறவி) என்ற பெயருடன் 1985 வரை ஒரு துறவி போன்று நேதாஜி உயிர் வாழ்ந்ததாக தெரிகிறது. குறித்த துறவியின் வாழ்க்கை முறை மற்றும் அவருக்கும் நேதாஜிக்கும் இடையிலான அநேக ஒற்றுமைகள் என்பனவே அவர் தான் நேதாஜி என மக்களை நம்பச் செய்கின்றன. குறித்த துறவி மிகவும் மர்மமான முறையில் வெளியில் தலை காட்டாது திரைக்குப் பின்னிருந்தே மக்களைச் சந்தித்ததாகவும் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஒரு சில சிஷ்யர்களைத் தவிர இவர் வேறு யாரையும் சந்திக்கவில்லை என்றும் அத்துடன் அவரின் சீடர்களாக நேதாஜியின் நெருங்கிய கூட்டாளிகளான டாக்டர் பவித்ரா மோகன் ராய், லீலா ராய், சுனில் தாஸ், திரிலோக்நாத் சக்ரவர்த்தி ஆகியோர் இருந்தனரென்றும் கூறப்படுகிறது. மற்றும் பவித்ரா மோகன் ராய் உட்பட்ட நேதாஜியின் நெருங்கிய கூட்டாளிகள் அவரின் பிறந்த தினமான ஜனவரி 23 அன்றே பகவான்ஜியின் பிறந்த தினத்தையும் கொண்டாடியதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவரை அடிக்கடி சந்தித்து வந்த நபர்களிடம், “நான் வெளிவருவது இந்தியாவின் நலனுக்கு உகந்தது அல்ல. பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம். அதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகலாம்” என்றும் பகவான்ஜி தெரிவித்துள்ளார். 1949ம் ஆண்டுக்குப் பின் இந்திய தலைமை மற்றும் ஆங்கிலேய-அமெரிக்க நாடுகளுக்கு எதிரான தனது செயல்பாடுகள் காரணமாக தன்னை போர்க்குற்றவாளியாக அறிவித்திருக்கலாம் என்று அவர் கருதி வந்ததாகவும் 1947ம் ஆண்டு சுதந்திரம் அளித்தது தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்படும் நாளில் தான் ஏன் தலைமறைவானேன் என்பதற்கான காரணத்தை இந்திய மக்கள் தெரிந்து கொள்வார்கள் என்று அவர் மேலும் தெரிவித்ததாகவும் பகவான்ஜியுடன் நெருக்கமாக இருந்தவர்கள் கூறியுள்ளனர். மேலும் வங்காளியாக இருந்த பகவான்ஜி ஆங்கிலம், இந்துஸ்தானி, சமஸ்கிருதம், ஜெர்மன் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தார் என்றும் இருந்தபோதும் மேலதிக கவனத்தை ஈர்பதைக் குறைக்கும் பொருட்டு அவர் பொதுவாக அதிகம் பேச மாட்டார் என்றும் அவர் குறித்துத் தெரிவிக்கிக்கப்படுறது. அது மட்டுமன்றி, பகவான்ஜி பார்ப்பதற்கு அந்த வயதில் நேதாஜி எவ்வாறு இருப்பாரோ அதே போன்று அவரை ஒத்த தோற்றம், உயரம், பல் இடுக்கு மற்றும் வயிற்றுத் தழும்பு ஆகியவற்றைக் கொண்டிருந்ததாகவும், நேதாஜி அணிவதைப் போலவே வட்ட வடிவ மூக்குக் கண்ணாடி மற்றும் தங்கக் கடிகாரம் என்பவற்றை அணிந்திருந்தார் என்றும் அவர் குறித்து மேலும் கூறப்படுகிறது. மேலும் கையெழுத்து நிபுணர்கள் நடத்திய ஆய்வில் பகவான்ஜியின் வங்காள மொழியிலான கையெழுத்தும் எழுத்து நடையும் நேதாஜியை ஒத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் பகவான்ஜி இறந்தபின் அவரது வீட்டை ஆராய்ந்த போது நேதாஜியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தின் புகைப்படங்களுடன், நேதாஜியின் தந்தை பயன்படுத்திய குடை மற்றும் நேதாஜி இறந்ததாகக் கூறி இந்திய அரசால் நேதாஜியின் சகோதரருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ஆவணமொன்றும் கைப்பற்றப் பட்டதாக கூறப்படுகிறது. பகவான்ஜி இறந்த பின் அவரது 7 பற்களில் இருந்து பெறப்பட்ட DNA ஆனது நேதாஜி குடும்பத்தாரின் DNA உடன் பொருந்தவில்லை என்று விசாரணைக் கமிஷன் தெரிவித்தது. இருந்த போதும் குறித்த ஆய்வுகள் மத்திய அரசுக்குச் சொந்தமான ஆய்வுக் கூடங்களில் செய்யப்பட்டன என்பதனால் இந்த வழக்குத் தொடர்பில் புலனாய்வு மோசடி இடம்பெற்றதாக நம்பப்படுகிறது. ஆக நேதாஜியின் மரணம் தொடர்பில் மூன்றாவது ஐதீகமே ஓரளவிற்கு வலுவானதாகத் தெரிகிறது. எது எவ்வாறிருப்பினும் உலகம் போற்றும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாற்றின் முக்கிய பகுதியொன்றை உலக நாடுகளுடனான தொடர்புகளைப் பேணுதல் உள்ளிட்ட அரசியல் காரணங்களுக்காக இந்தியா மறைத்துவிட்டதாக நம்பலாம். நேதாஜி தொடர்பான உண்மைகளை மூடி மறைத்ததில் பெரும் பங்கு குறிப்பாக தற்போதைய இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இருக்கிறது என்று அனுஜ் தார் எழுதி தற்போது வெளிவந்துள்ள India’s Biggest Cover-up என்ற புத்தகம் தெரிவிக்கிறது. இனியாவது, நேதாஜியின் மரணம் தொடர்பில் உண்மைகள் வெளிவருமா? காலம் பதில் சொல்லும் பொறுத்திருந்து பார்க்கலாம். நன்றி-Anuthinan Suthanthiranathan
Posted on: Mon, 09 Sep 2013 06:28:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015